Thursday, December 4, 2008

ஒரு இந்தியனின் இன்றைய மன நிலை!

சமீபத்தில் வெளியான ஒரு ஆங்கிலக் கட்டுரையின் மேம்பட்ட தமிழ் வடிவம்தான் இந்தக் கட்டுரை என்றாலும், படிக்கும் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் விதத்தில் ஒவ்வொரு வரிகளும் அமைந்திருப்பதை உணரலாம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் தரமான எழுத்தாக இதைப் பார்த்தேன்.

கட்டுரை வெளியான தளம் தட்ஸ்தமிழ். அதன் ஆசிரியர் ஏ.கே.கான் பாராட்டுக்குரியவர்.

இனி செய்தி!

இவர்களுக்கு தேவையா என்எஸ்ஜி பாதுகாப்பு?

சென்னை: நாட்டில் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலையில் அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்காக நாடு தினமும் பல நூறு கோடிகளை செலவழித்துக் கொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலான அரசியல்வாதிகள் வெறும் பந்தாவுக்காகவே தங்களைச் சுற்றி என்எஸ்ஜி கமாண்டோக்களை நிறுத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெட்டி பந்தா அரசியல்வாதிகளில் முக்கியமானவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிலதா. இவர் முதல்வராக இருந்தபோது இவரது காருக்கு முன்னும் பின்னும் 100 கார்களாகவது போக வேண்டும். என்எஸ்ஜி கமாண்டோக்கள், ஜாமர்கள் பொருத்திய வாகனங்கள், போலீஸ் ஜீப்புகள், ஆம்புலன்ஸ், கரை வேட்டிகளி்ன் கார்கள் என குறைந்தபட்சம் 50, 60 கார்களாவது போக வேண்டும். இதைப் பார்த்து மக்கள் வாயைப் பிளக்க வேண்டும். இவ்வளவு பெரிய தலைவரா என்று மக்கள் நினைக்க வேண்டும்.

இவரது வாகனம் வருவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பே சாலைகள் எல்லாம் சீல் செய்யப்பட்டுவிடும். ஆட்சியை விட்டு போன பின்னர் தான் இவரது கார் வரிசை கொஞ்சம் குறைந்தது. ஆனாலும் இவருக்கு இன்னும் இசட் பிளஸ் என்எஸ்ஜி பாதுகாப்பு உள்ளது.

ஜெயலலிதாவைவிட ஒரு படி மேலே போய்விட்டவர் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி. இவருக்கு அரசியல் எதிரிகள் தவிர வேறு எந்த ஆபத்தும் இருப்பதாக எந்தத் தகவலும் இல்லை. இந்த அரசியல் எதிரிகளை எதிர்கொள்ள 4 ஜீப் போலீசாரே போதும். ஆனால், பந்தாவுக்கு அது போதாதே.

இதனால் மாயாவதி தனக்கு என்எஸ்ஜி கமாண்டோ பாதுகாப்பை வலுக்கட்டாயமாகக் கேட்டு வாங்கிக் கொண்டுவிட்டார். இவரது 24 மணி நேர பாதுகாப்புக்கு 24 கமாண்டோக்கள் 3 ஷிப்ட்களில் பணியாற்றுகின்றனர். இவர்கள் தவிர 350 ஆயுதம் தாங்கிய போலீசாரும் 24 மணி நேரம் இவரது பாதுகாப்புக்காக டெடிகேட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களாவது பரவாயில்லை. அமர் சி்ங் என்று ஒரு அரசியல்-கார்பரேட் புரோக்கர் இருக்கிறார். இப்போது, மத்திய அரசு ஆட்சியில் நீடிக்க இவரும் முலாயம் சிங்கின் ஆதரவுமே காரணம். மத்திய அரசுக்கு சமாஜ்வாடி கட்சி எம்பிக்களின் ஆதரவை அறிவித்த மறு நிமிடமே தனக்கும் என்எஸ்ஜி கமாண்டோ பாதுகாப்பு கேட்டு வாங்கிக் கொண்டார். இவருக்கும் 24 பேர் .. 8 மணி நேர ஷிப்டில் பாதுகாப்பு தந்து கொண்டிருக்கின்றனர்.

அமர் சிங் தனக்கு மட்டும் இந்த பாதுகாப்பை வாங்கிக் கொண்டால் போதுமா.. தனது தலைவர் முலாயமுக்கும் இந்தப் பாதுகாப்பை பெற்றுத் தந்துள்ளார்.

இந்தப் பட்டியலில் தேவெ கெளடாக்கள், சுப்பிரமணியம் சுவாமிகள் போன்ற அரசியல் ஜோக்கர்களும் அடக்கம். இவர்கள் எல்லாம் இசட் கேட்டகிரி என்ற பட்டியலின் கொண்டு வரப்பட்டு என்எஸ்ஜி பாதுகாப்பில் உள்ளனர்.

இப்படியாக 250 பேர் விவிஐபிக்கள் என்ற பட்டியலின் கீழ் கொண்டு வரப்பட்டு என்எஸ்ஜி பாதுகாப்பில் உள்ளனர். இதற்காக அரசு செலவிடம் பணம் ரூ. 158 கோடி.

தீவிரவாதிகளுக்கே தெரியாத ஆட்கள்....:

இந்தப் பட்டியலில் உள்ள மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், சரத் யாதவ், முரளி மனோகர் ஜோஷி ஆகிய பெயர்களையாவது நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், சஜ்ஜன் குமார், ஆர்எல் பாட்டியா, பிஎல் ஜோஷி, பிரிஜ்பூஷன் சரன், பிரமோத் திவாரி... இந்தப் பெயர்கள் நமக்கு மட்டுமல்ல தீவிரவாதிகளுக்கே தெரியாத ஆட்கள்.

அதே போல மத்திய அமைச்சர் என்ற ஒரே காரணத்துக்காக கமாண்டோ பாதுக்காப்பில் உள்ளவர் இ.அகமது. இவரை கேரளாவைத் தாண்டினால் யாருக்கும் தெரியாது.

இன்னொரு கொடுமை.. என்எஸ்ஜி பாதுகாப்பில் உள்ள சஜ்ஜன் குமார் மீது ஒரு கொலை கேசும் உள்ளது.

இதைத் தவிர பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 14 பேர் இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு என்எஸ்ஜி உச்சபட்ச பாதுகாப்பு அளி்த்து வருகிறது. இதற்கு செலவாகும் தொகை ரூ. 180 கோடி.

நம் நாட்டில் 1 லட்சம் பேருக்கு 122 போலீசார் என்ற கணக்கில் தான் காவலர்கள் உள்ளனர். நாட்டில் மொத்தமுள்ள போலீசாரில் உளவுப் பிரிவில் உள்ளவர்கள் 1 சதவீதத்துக்கும் குறைவு. ஆனால், அரசியல்வாதிகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கை 33 சதவீதம்.

அதாவது 3ல் 1 போலீஸ்காரருக்கு வேலையே அரசியல்வாதிகளின் பாதுகாப்பு தான்.

மத்திய உளவுப் பிரிவி்ன் தகவலின்படி இப்போது என்எஸ்ஜி பாதுகாப்பில் உள்ள 30 சதவீதம் பேருக்கு அந்த பாதுகாப்பே தேவையில்லை. 50 சதவீதம் பேருக்கு லத்தி ஏந்திய சில போலீசாரே போதும். மிச்சமிருக்கும் 20 சதவீதம் பேருக்குத் தான் உண்மையிலேயே இந்த பாதுகாப்பு தேவை.

இன்னொரு விஷயமும் உண்டு. 1984ம் ஆண்டில் இந்த என்எஸ்ஜி உருவாக்கப்பட்டதன் நோக்கம் அரசியல் தலைவர்களை பாதுகாப்பது அல்ல. விமானக் கடத்தலைத் தடுப்பது, தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை நடத்துவது. இது தான் இந்தப் படை உருவாக்கப்பட்டதன் உண்மைக் காரணம்.

இந்தப் படையில் Special Action Group (SAG), Special Rangers Group (SRG) என இரு பிரிவுகள் உள்ளன. ராணுவத்தின் மிகச் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து உருவாக்கப்படுவது SAG. எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீ்ஸ் படை, இந்தோ-திபெத்தியன் பார்டர் போலீஸ், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, மாநில போலீசில் இருந்து சிறந்த வீரர்களைக் கொண்டு உருவாக்கப்படுவது SRG.

மிகக் கடினமான பயிற்சிகள், வெறும் கையால் ஆட்களைக் காலி செய்யும் திறமை, காடு, பனி, பாலைவனம், கடல், மலை எந்த இடத்திலும் பல நாட்கள் சோறு தண்ணி இல்லாவிட்டாலும் தாக்குப் பிடித்து தாக்குதல் நடத்தும் திறமை மிக்கவர்கள் இந்த வீரர்கள்.

விவிஐபிக்கள் என்ற பெயரில் வலம் வரும் அரசியல்வாதிகளை இசட் பிளஸ், இசட், ஒய், எக்ஸ் என பிரித்து பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர் இந்தப் படையினர்.

54 எம்பிக்களை கையில் வைத்துள்ள பிரகாஷ் காரத், ஏபி பர்தான் ஆகியோரும் அரசியல் தலைவர்கள் தான். மம்தா பானர்ஜியும் அரசியல் தலைவர் தான். 14 வருடம் முதல்வராக இருந்த ஜோதி பாசுவும் அரசியல் தலைவர் தான். ஆனால், இவர்கள் எல்லாம் ஒரு போலீஸைக் கூட உடன் வைத்துக் கொள்வதி்ல்லை. இவர்கள் மக்களுடன் கலந்துவிட்ட உண்மையான அரசியல் தலைவர்கள். இவர்களைப் போல மேலும் பல நல்ல அரசியல்வாதிகளும் உள்ளனர்.

ஆனால், தங்களைச் சுற்றி கமாண்டோ நின்றால் தான் படிப்பறிவில்லாத மக்கள் மனதி்ல் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்த முடியும், தான் ஒரு பெரிய தலைவராகத் தெரிவோம் என்ற ஒரே காரணத்துக்காக இந்தப் படையை தேவையே இல்லாமல் பயன்படுத்தி வருகின்றனர் ஊழல், லஞ்சம், சுரண்டலுக்குப் பேர் போன பல அரசியல்வாதிகள்.

5 comments:

கிரி said...

உண்மையிலேயே சிறப்பான கட்டுரை.

இவர்கள் எல்லாம் எப்போதும் இதை உணர மாட்டார்கள், இவர்களை போன்றவர்களை தேர்ந்தெடுப்பதை மக்களும் நிறுத்த போவதில்லை.

Anonymous said...

can some one advice me of the existance of a forum which takes responsibility of filing public litigation cases against such atrocities? not only me, but many Indians will be glad to contribute financially to support such a cause..

Anvarsha

Vaanathin Keezhe... said...

நன்றி கிரி...

Vaanathin Keezhe... said...

Anvarsha...

டிராபிக் ராமசாமி ஏற்கெனவே இதற்கு தயாராகிக் கொண்டிருப்பதாக தகவல்... விசாரித்து சொல்கிறேன்!

Anonymous said...

well said