Sunday, November 23, 2008

தொடரட்டும் இந்த களவாணித்தனம்!

அரசாங்கம் என்பது என்ன? அப்படி ஒரு அமைப்பு நமக்குத் தேவையா?

மக்கள் குழுவை முறைப்படுத்த, அவர்களின் தேவைகளைக் கவனிக்க, மக்களால் உருவாக்கப்படுகிற, அங்கீகரிக்கப்படுகிற அமைப்புதான் அரசாங்கம்.

தனித்தனி மனிதர்களின் தான்தோன்றித்தனங்கள் சமூகச் சிதைவை ஏற்படுத்தும் தருணங்களில் இப்படியொரு அமைப்பின் இருத்தல் அவசியமாகிறது.

இவற்றையெல்லாம்விட முக்கியமானது இந்த அரசாங்கம் எப்படிப்பட்ட தன்மையதாக இருந்தாலும், நேர்மையாக இருப்பது முக்கியம்.

மக்களின் வெறுப்புக்குரியவனாக தன்னை ஆக்கிக் கொள்ளும் மன்னனுக்கு கடைசி புகலிடம் தூக்கு மேடைதான்!

நேர்மையில்லாத அரசுகள் தூக்கியெறியப்பட வேண்டியவையே!

-அரசியல் இலக்கணம் வகுத்த நிக்கோலோ மாக்கியவல்லி (1469-1527) இப்படிக் கூறுகிறார்!

இன்றைய ஐக்கிய முற்போக்கு (?!) கூட்டணி அரசின் நேர்மையைப் பார்க்கிற பொழுது, மாக்கியவல்லியின் கடைசி வாக்கியம் மனதுக்குள் நிழலாடுகிறது.

எத்தனையோ விஷயங்களில் இந்திய அரசுகளின் நேர்மை சந்தேகத்துக்கிடமின்றி பொய்யாக்கப்பட்டுள்ளது!

பொதுவாக ஒரு குற்றவாளிதான் சட்டத்தின் ஓட்டைகளைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாக இறங்குவான்.

ஆனால் இந்தியாவின் மத்திய மாநில அரசுகள் இப்போது ஒரு குற்றவாளியின் வேலையைத்தான் முழுநேரமாகச் செய்துகொண்டிருக்கின்றன. அதிகபட்ச நேர்மையின்மைக்கு ஒரு உதாரணமாகவே இந்த அரசுகள் செயல்பட்டு வருகின்றன.

பொத்தாம் பொதுவாக இப்படிச் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.
இதோ ஒரு உதாரணம்...

பெட்ரோல் டீஸல் விலைக் குறைப்பில் அரசுகள் காட்டி வரும் அதீத தயக்கம்.
இதைவிட அயோக்கியத்தனம் கிடையாது என்னும் அளவுக்கு, ஒரு சாதாரண வியாபாரியைவிட மோசமான நேர்மைக் குறைவுடன் அரசுகளும், அரசு சார் நிறுவனங்களும், அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள் பெட்ரோலியப் பொருட்களின் விலை விஷயத்தில்.

சர்வதேச எண்ணெய் உற்பத்தி நாடுகள் அல்லது அவற்றின் பிரதான எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள், பெட்ரோலிய சந்தையை மையப்படுத்தி தாங்கள் நடத்தி வந்த ஊக வாணிபம் படுத்துவிட்டதால் வேறு வழியின்றி விலைச் சரிவை ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

“கச்சா எண்ணெயின் விலை 48 டாலர்கள்தான் வாங்க... வாங்க’ எனக் கூவிக்கூவி விற்கிறார்கள் பெரும்பாலான நாடுகள். இன்னும் சில நாடுகளோ, அடுத்து எப்போது விலை ஏறும் என்ற எதிர்பார்ப்பில் கச்சா எண்ணெய்யை இருப்பில் வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
இன்றைய விலை நிலையில் இந்திய அரசு நியாயமாக பெட்ரோல் விற்றால் ஒரு லிட்டர் ரூ. 25க்கு மேல் ஒரு நயா பைசா கூட கூடுதலாக வைத்து விற்கக் கூடாது.

ஆனால் அப்படியா நடக்கிறது?

ஒரு லிட்டர் பெட்ரோலின் நியாயமான விலை 20 ரூபாய்க்கும் கீழ்தான். ஆனால் மாநில அரசுகளின் வரி, சுங்கத் தீர்வை, கல்வி வரி, போக்குவரத்து வரி என எல்லாமாகச் சேர்த்து ரூ.55 வரை பிடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அரசுகளின் வேலை வெறும் வரிவிதிப்புதான் என்றால், அதற்குப் பெயர் நிர்வாகம் அல்ல... வெறும் தண்டல் வசூல்தான்!

மத்திய அரசு பெட்ரோலுக்கு ரூ.20 என விலை நிர்ணயம் செய்தால், அதை இன்னும் ஒரு மடங்கு அதிக விலைக்கு விற்கக் காரணமாக இருப்பவை மாநில அரசுகள்.

இன்றைய பெட்ரோல் விலையில் மத்திய அரசு வைத்திருக்கும் விலை ரூ. 19தான். மீதி 36 ரூபாய் வரி! இந்த வரியில் கணிசமான பகுதி மாநில அரசுகள் விதிப்பது. விற்பனை வரி, வாகன வரி, உள்நுழைவு வரி... இப்படி எல்லா வரிகளும் மாநில அரசுகளைச் சேர்ந்தவைதான்.

ஒவ்வொரு முறையும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறும் போதும் குறைந்தபட்சம் 2 மணி நேரம் கூடப் பொறுத்திருக்க முடியாமல் விலை ஏற்றத்தை அமலுக்குக் கொண்டுவரும் இந்த அரசுகள் (முன்தேதியிட்டு ஏத்த முடியுமா என்று ), விலைக் குறைப்பின் போதுமட்டும் சண்டித்தனம் செய்வதற்குப் பெயர்தான் மக்கள் நலம் காத்தலா?

முன்பு மானியம் வழங்கப்பட்டது, மக்களுக்கு சலுகை விலையில் பெட்ரோல், மண்ணெண்ணெய் கொடுத்தோம். இனி அப்படித் தரமுடியாது என்று எண்ணெய் நிறுவனங்கள் கூறிவிட்டன. அப்படியே வைத்துக் கொண்டாலும் இரண்டு மாதங்களுக்கு முன்பே பெட்ரோலியப் பொருட்கள்- சமையல் எரிவாயு விலையை அந்த அரசு கணிசமாகக் குறைத்திருக்க வேண்டும். ஆனால்... இந்த இரு மாதங்களாக எண்ணெய் நிறுவனங்கள் லாபம் சம்பாதித்து வருகின்றன என்பதே உண்மை! இதை ஒப்புக் கொண்டிருப்பவர் பெட்ரோலியத்துறை அமைச்சர் தியோரா அல்ல.. ‘நமது பிரதமர்’ என பெருமைப்பட்டுக் கொள்கிறோமே.. அந்த மன்மோகன் சிங்!!

அவர் கணக்கைப் பாருங்கள்...

‘பெட்ரோலில் ஒரு லிட்டருக்கு இப்போது 4.90 காசுகள் லாபம் வருவது உண்மையே. ஆனால் டீஸல் விற்பனையில் 69 காசுகள் நஷ்டம் வருகிறது. இதைச் சரிகட்ட வேண்டும்!’

69 பைசா நஷ்டத்தைச் சரிகட்ட 4.90 காசு லாபம் வேண்டுமாம் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு. இது எந்த வகைக் கணக்கு!

கவனிக்க: நிர்வாகச் செலவுகள், உள் கட்டமைப்புச் செலவுகள், வரி, வட்டி, தண்டச் சம்பளம் என எல்லாக் கருமத்தையும் கழித்துக் கொண்ட பிறகுதான் இவர்கள் லாபத்தைக் கணக்கிடுகிறார்கள்!

தொடரட்டும் இந்த களவாணித்தனம்!

-ஷங்கர்

Saturday, November 22, 2008

வீடு வாங்கலியோ வீடு!

வீடு வாங்கி கடனில் சாவதை விட, வாடகைக் கொடுத்துக் கொண்டே நிம்மதியாகக் காலத்தைத் தள்ளலாம், நிலைமை சரியாகும்வரை!’ என்ற எண்ணம் கிட்டத்தட்ட அனைத்து நடுத்தர மக்களுக்குமே வந்துவிட்டது.

தமிழகம் மற்றும் தலைநகர் சென்னையில் ரியல் எஸ்டேட் எப்படி உச்சாணிக் கொம்புக்குப் போனது?

சென்னையிலிருந்து 50 கி.மீ தொலைவாக இருந்தாலும் பரவாயில்லை. நமக்கென்று ஒரு வீடு, கடன் வாங்கியாவது வாங்கி வைத்துவிடலாம் என்று நடுத்தர, உயர் நடுத்தர வர்க்கத்தினர் ஒரு பக்கம் கடன் தொகையோடு அலைய, ஐடி நிறுவனங்களில் அள்ளித் தந்த சம்பளத்தை என்ன செய்வது என்று திக்குமுக்காடிப்போய் சின்னப் பசங்களெல்லாம், ஃபிளாட், தனி வீடு என்று தேடித் தேடி, ரியல் எஸ்டேட் முதலைகள் கேட்ட பணத்தைக் கொட்ட, 50 ஆயிரம் கூட பெறாத ஒரு மனைக்கு 50 லட்சம் வரை விலை ஏற்றிவிட்டார்கள்.

இந்தப் போக்கை நிலையென நம்பிய பல நிறுவனங்களின் பார்வை ரியல் எஸ்டேட் துறை மீதே அழுத்தமாக விழுந்தது.

சென்னையில் தொற்றிய இந்த ‘விஷ ஜூரம்’ ஐடி நகரங்கள் என புதிய அந்தஸ்து பெற்ற அத்தனை நகரங்களிலும் தொற்றிக் கொள்ள, ஆகாசத்தைத் தொட்டது வீடுகள் மற்றும் மனைகளின் விலை. வங்கிகள் திருவிழாக் கொண்டாட்டத்துடன் கடன் கொடுத்து மகிழ்ந்தன.
ஆனால் அமெரிக்காவின் ரியல் எஸ்டேட் துறை மற்றும் அதை நம்பியிருந்த வங்கிகள் வீழ்ந்த கதை அம்பலமானதும் விழி பிதுங்கிப் போயின, அவர்களைப் பார்த்து காப்பியடித்த இந்திய நிறுவனங்களும் வங்கிகளும்.

வீட்டுக் கடனுக்கு வட்டி உயர்வு, புதிய கடன் தருவதில் சுணக்கம் என பல நடவடிக்கைகளில் இறங்க, ரூ.20 லட்சம் வங்கிக் கடன் பெற்ற சொந்த வீடு வாங்கியவர்கள் வங்கிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் இப்படி கடன் வாங்கியவர்களின் வேலையும் கேள்விக்குறியாகிவிட்டது. பல ஐடி நிறுவனங்களில் தொடர் ஆட்குறைப்புகள். வேளச்சேரி மற்றும் சோழிங்கநல்லூரில் ஒரே நாளில் 300 பேர் வரை ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதில் ஆடிப்போயுள்ளனர், அவர்களை நம்பி புதுப்புது ஃபிளாட்களைக் கட்டிய பில்டர்கள்.

இந்த நிலை தொடர்ந்தால், டெட்ராய்ட்டில் கடனுக்கு வாங்கிய வீடுகளை அம்போவென விட்டுவிட்டு மக்கள் ஓட்டம் பிடித்த நிலைதான் இங்கும்.

அமெரிக்கா, பிரிட்டனில் இந்த வீழ்ச்சியை எதிர்பார்த்து அதற்குத் தங்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தனர் மக்கள். அப்படியும் கூட அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
கடன் வாங்குவதிலும், கொடுப்பதிலும் அவர்களைப் பார்த்துக் காப்பியடித்த நம்மவர்களோ, இந்த வீழ்ச்சியை எதிர்பார்க்கவே இல்லை.

இன்னும் ஓரிரு மாதங்கள்தான்... மீண்டும் பழைய விலைக்கே போகப்போகிறது வீட்டு மனைகளின் விலை என்கிறார்கள், அரசு வங்கிகளின் அதிகாரிகள்.

இதற்குக் கட்டியம் கூறுவதுபோல, இப்போது செய்தித்தாள்களில் கூவிக்கூவி அழைக்கிறார்கள் மலிவு விலையில் வீட்டு மனை வாங்கிக் கொள்ள.

ரூ.1 லட்சம் என்று விற்பனை செய்த இடத்தை இப்போது ரூ.50 சதவிகித தள்ளுபடி விலையில் தருவதாக பக்கம் பக்கமாக விளம்பரம் தர ஆரம்பித்திருக்கிறார்கள்.
வேளச்சேரி, மடிப்பாக்கம், ஊரப்பாக்கம், மறைமலைநகர் போன்ற பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட பல வீடுகள் மாதக்கணக்கில் பூட்டி வைக்கப்பட்டுள்ளன.

வாங்க.... வாங்க!!

இதை உறுதிப்படுத்தும் விதத்தில், ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களான டிஎல்எப், யுனிடெக், பர்ஸ்வந்த், ஓமெக்ஸ் உட்பட 4,000 நிறுவனங்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ரியல் எஸ்டேட் விற்பனையாளர்கள் மனை அல்லது வீட்டின் விலையில் குறைந்தது 15 சதவிகிதம் வரைக் கட்டாயம் குறைக்க வேண்டும் என்றும், அதிகபட்சமாக, அவரவர் வசதி மற்றும் இடத்தின் தன்மையைப் பொருத்து முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, கட்டி முடிக்கப்பட்ட வீடுகள், முதலீடு செய்யப்பட்டு விற்காமல் இருந்த மனை, வீடுகளை விற்க பரிசுகளை அளிக்கும் திட்டத்தை டெல்லி, மும்பை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நேற்று அறிவித்தன. விலை உயர்ந்த பிளாட்டை முன்பதிவு செய்வோருக்கு கார், லேப்டாப், பிளாஸ்மா டிவி எல்லாம் கூடத் தருவதாக தமுக்கடித்து வருகின்றனர்.

ஒரு சொகுசு வீடு வாங்கினால் ஒரு படுக்கையறை வீடு இலவசம் என்று கூட இந்த வாரம் ஒரு முன்னணி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் சில பில்டர்கள், தங்கள் லாபத்தைக் குறைத்துக் கொண்டு வீடு, மனை விலையை சதுர அடிக்கு 10 முதல் 25 சதவீதம் வரை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

ஆனாலும் சிக்கல் தீர்வதாகத் தெரியவில்லை. இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்தப் போக்குதான் நீடிக்கும் என வங்கிகள் கணித்துள்ளதால், மனைகளுக்கு கடன் தரும் திட்டத்தை அறிவிக்கப்படாமல் நிறுத்தியுள்ளன பல வங்கிகள்.

- ஷங்கர்

Wednesday, November 19, 2008

சமாளிப்பான் சாமானியன்; பாவம் நம்ம முதலாளிகள்!


ஒரு காரில் பயணிப்பதை விட விமானத்தில் பயணிப்பதே இன்றைக்கு மலிவானது. அந்த அளவு விமானங்களுக்குப் பயன்படுத்தும் எரிபொருளின் விலை குறைந்துவிட்டது இப்போது. ஆனால் அதன் பலன்கள் மக்களைப் போய்ச் சேர்கிறதா என்பதுதான் இன்றைய கேள்வி.

சமீபத்தில் கிடுகிடு வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது கச்சா எண்ணெய் விலை. ஆனால் விலை ஏறும்போது கேட்ட கூக் குரல்களை இன்றைக்குக் காணோம். காரணம் முன்பு விட்டதைப் பிடிக்க, இப்போது ‘கமுக்கமாக’ லாபம் பார்த்துக் கொண்டிருப்பதாக பெட்ரோலியத் துறை அமைச்சரே பகிரங்கமாக அறிவித்துள்ளார் (இந்த பாலிடிக்ஸை விவரமாக பின்னர் பார்ப்போம்...).

உதாரணத்துக்கு, ஒரு லிட்டர் விமான பெட்ரோல் (ATF) விலை ரூ.40.69 காசுதான். ஆனால் சாதாரண பெட்ரோலின் விலை 55 ரூபாய்க்கும் அதிகம் (மாநிலங்களில் விதிக்கப்படும் வரிகளைப் பொறுத்து...)
ஆனால் விமானக் கட்டணங்கள் மட்டும் முன்பைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. எண்ணெய் விலை ஏற்றத்தைக் காரணம் காட்டி உயர்த்தப்பட்ட விமானக் கட்டணத்தை குறைக்கும் ஐடியாவே எந்த தனியார் ஏர்வேஸூக்கு இல்லை போலிருக்கிறது.

இந்தப் போக்கைக் கட்டுப்படுத்துவதற்குப் பதில், தனியார் விமான நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கும் நடவடிக்கைகளில் மட்டுமே பெட்ரோலியம் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகங்கள் செயல்படுவதாக பெட்ரோலியத் துறையின் முன்னாள் அமைச்சர் ராம் நாயக் குற்றம் சாட்டியுள்ளதை வழக்கமான புகாராகத் தள்ளிவிட முடியாது.

ஒரு பக்கம் விமான நிறுவனங்கள் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கிறார் மத்திய நிதி அமைச்சர். ஆனால் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரோ தனியார் விமான நிறுவனங்களுக்குப் பரிந்து கொண்டு வருகிறார். ஏற்கெனவே நஷ்டத்தில் இயங்கும் இந்த நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் அரசு என பகிரங்கமாகப் பேசி வருகிறார் பிரபுல் பட்டேல்.

இன்னொரு பக்கம் ‘நஷ்டத்தில் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றன பெட்ரோல் நிறுவனங்கள்!’ என உருக்கமாகப் பேசும் முரளி தியோராவும் கூட, விமான எரிபொருள்களுக்கு மட்டும் தாராளமான விலைக் குறைப்புச் சலுகைகளை அறிவித்துள்ளார்.

இதே சலுகைகள் பயணிகளுக்கும் கிடைக்குமா... விமான எரிபொருளுக்கு கிடைத்த வரிச் சலுகைகள், தீர்வை விலக்குகள் சாமானியர்கள் பயன்படுத்தும் சாதா பெட்ரோலுக்கும் கிடைக்குமா?

“நிச்சயம் கிடைக்காது. இந்த அரசு ஏழைகளுக்காக அமைந்தது அல்ல. இவர்களுக்கு மக்கள் நலம் மட்டுமே முக்கியம் என்பது உண்மையானால், கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் மக்களை அழுத்தும் வரிச்சுமையைக் குறைக்கப் பயன்படுத்தலாம். ஆனால் இவர்கள் செய்ய மாட்டார்கள். அதற்கு பெட்ரோல் விலையை பிடிவாதமாக குறைக்க மறுப்பதே ஒரு உதராணம்...” என்கிறார் ராம் நாயக்.

இவர்கள் மட்டும் என்னவாம்? என்கிறீர்களா... இவர்கள் அரசியலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே மறப்போம், எப்போதும் விலகாத விலைச் சுமையை!!

-ஷங்கர், தட்ஸ்தமிழ்

உறவுகளின் துரோகம்: முதியோர் இல்லத்தில் ஒரு மூத்த எழுத்தாளர்!

1973-ம் ஆண்டு சாஹித்ய அகாதமி விருது பெற்ற மாபெரும் எழுத்தாளர் அந்தப் பெண்மணி. ஆனால் இன்று ஆதரவுக்கு ஆளின்றி ஒரு முதியோர் இல்லத்தில் தன் மிச்ச நாளைக் கழித்துக் கொண்டிருக்கிறார்.

அவர்... ராஜம் கிருஷணன். தமிழின் மிகச் சிறந்த பெண் எழுத்தாளர்களில் ஒருவர். இடதுசாரி சிந்தனைகளுடன், அதே நேரம் மக்களின் யதார்த்த வாழ்க்கையை முற்போக்கான 50-க்கும் மேற்பட்ட நாவல்கள் மற்றும் நூறுக்கும் அதிகமான சிறுகதைகள், கட்டுரைகளைத் தமிழுக்குத் தந்தவர்.

1950-லேயே புகழ்பெற்ற நியூயார்க் ஹெரால்ட் டிரிபியூனின் சர்வதேச விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் இவராகத்தான் இருக்கும்.

உப்பள மக்களின் வாழ்க்கையின் அடிப்படையில் இவர் எழுதிய வேருக்கு நீர்தான் இவருக்கு சாஹித்ய அகாதமி விருதைப் பெற்றுத் தந்தது. இவரது மண்ணகத்துப் பூந்துளிகளையும், குறிஞ்சித் தேனையும், கரிப்பு மணிகளையும் தமிழறிந்த எந்த வாசகரும் மறந்திருக்க முடியாது.

இந்தளவு புகழின் உச்சியிலிருந்த ஒரு மிகப் பிரபல எழுத்தாளருக்கு ஏனிந்த பாதுகாப்பற்ற நிலை?
திருச்சி மாவட்டம் முசிறியில் 1925-ம் ஆண்டு பிறந்தவர் ராஜம் கிருஷ்ணன்.  2002-ம் ஆண்டு தன் கணவர் கிருஷ்ணனை இழந்தார். பிள்ளைகள் கிடையாது. அதன் பிறகு தனது உறவுக்காரர்கள் சிலரை நம்பி தன்னிடமிருந்த பணத்தையும், சொத்துக்களையும் விட்டு வைத்தாராம். ஆனால் அவர்களோ இவரை ஏமாற்றிவிட்டு மொத்தமாக ஏப்பம் விட்டுவிட, 83 வயதில் நடுத்தெருவில் நிர்க்கதியாய் நிற்க, சில நண்பர்களும் அவரது ஒரு சகோதரரும் கை கொடுத்துள்ளனர். அவர்கள்தான் ராஜம் கிருஷ்ணனை விச்ராந்தி என்ற இந்த முதியார் இல்லத்தில் சேர்த்திருக்கிறார்கள்.

ஆனால் யாரும் தன்னைப் பார்த்து இரக்கப்படுவதை இந்த நிலையிலும் விரும்பாத ராஜம் கிருஷ்ணன், இப்போதும் அதே உற்சாகத்துடன் எழுத்துப் பணியைத் தொடர்கிறார். இவரது கடைசி புத்தகம் ‘உயிர் விளையும் நிலங்கள்’. குடும்பக் கட்டுப்பாடு மற்றும் அதை பெண்கள் எதிர்நோக்கும் விதங்கள் குறித்து 25க்கும் மேற்பட்ட கட்டுரைகளோடு கூடிய இந்தப் புத்தகம் பெண்களுக்கு புதிய விழிப்பை உண்டாக்கும் முயற்சி.

இப்போதும் கட்டுரைகள் மற்றும் கதைகளை எழுதிக் கொண்டிருக்கும் ராஜம், தமிழ் இலக்கிய உலகப் போக்கு குறித்த தனது அதிருப்தியை இப்படி வெளிப்படுத்துகிறார்:

உப்பளங்களில் வாழும் மக்களின் வாழ்க்கை முறையைப் பதிவு செய்ய தூத்துக்குடி உப்பளத்தில் 6 மாதங்கள் தங்கியிருந்தேன். காரணம் எதையும் மேம்போக்காக்கப் பதிவதில் எனக்கு விருப்பமில்லை. மக்களின் வாழ்க்கையை அதன் வலிகளோடும், இயல்புகளோடும் பதிவு செய்ய வேண்டும்.

இன்றைக்கு பெரும்பாலான எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் கதையின் களத்தைப் பற்றிய அறிவு கூட இல்லாமல்தான் எழுதுகிறார்கள். எல்லாம் வறட்டுக் கற்பனை. இவர்களுக்கு சினிமா, சினிமா பாடல்கள்தான் வாழ்க்கை, இலக்கியம் என்றாகிவிட்டது. யாருக்கும் மக்களைப் பற்றிய அக்கறையோ, குறைந்தபட்சம் அவர்களின் உலகத்தை எட்டிப் பார்க்கும் ஆவலோ கூட கிடையாது. எழுத்து பெரிய வியாரமாகிவிட்டதன் விளைவாகக் கூட இது இருக்கலாம்...’ என்கிறார் ராஜம் கிருஷ்ணன்.

நெஞ்சைச் சுடும் நிஜம்!

-ஷங்கர்