Tuesday, December 16, 2008

நகரம்

இன்றைய இந்திய நகரங்கள் குறிப்பாக சென்னையின் அவல நிலையை இதைவிட அழுத்தமாகப் பதிவு செய்வது மகா கஷ்டம்...






நன்றி: ஆர்.கே.லட்சுமண்

Thursday, December 4, 2008

‘ஜனங்ககிட்ட அடிச்சது போதும்... தேர்தல் வருது!’

ரெண்டு மாசம் முடிஞ்ச வரைக்கும் அடிச்சாச்சு... இனி நல்லவங்களா மாறிவிட வேண்டியதுதான் என மத்திய அரசு முடிவு செய்துவிட்டது போலும்...

அட ஆமாங்க... பெட்ரோல் டீஸல் விலைக் குறைப்பை அதிகாரப்பூர்வமா அடுத்த வாரம் அறிவிக்க முடிவு செஞ்சிருக்காங்களாம்...

அதன்படி பெட்ரோல் லிட்டருக்கு ரூ.10, டீசல் ரூ.3 மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.20ம் குறைக்கப்படும் என்றும் பெட்ரோலியத் துறை அமைச்சகம் நேற்று ‘கோடி” காட்டியுள்ளது!

கடந்த ஜூன் மாதத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகபட்சமாக பேரலுக்கு 147 டாலராக இருந்தது. அதைக் காரணம் காட்டி, ஒரு முறை இருமுறை அல்ல 5 முறை பெட்ரோல் – டீஸல் விலை உயர்த்தப்பட்டது.

இந் நிலையில், சர்வதேச பொருளாதார நெருக்கடி ஆரம்பமானது. இந்த நெருக்கடியால் பெட்ரோலியப் பொருட்களின் தேவை மளமளவென சரியத் தொடங்கியது. எனவே, கச்சா எண்ணெய் விலையும் சரிந்தது.

கடந்த இரு மாதங்களாகவே, கச்சா எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியில் இருந்தது. ஆனாலும் இந்திய பெட்ரோலியத் துறை விலைக் குறைப்பு பற்றி மவுனம் சாதித்தது. இந்த வாரம் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 45 டாலர் ஆகிவிட்டது. அதாவது நான்கில் ஒரு பங்காக குறைந்து பாதாளத்தில் வீழ்ந்துவிட்டது கச்சா எண்ணெய் விலை. 1 லிட்டர் கச்சா எண்ணெய்யின் இன்றைய மார்க்கெட் மதிப்பு ரூ.13 மட்டும்தான்!

இன்றைய தேதிக்கு அரசு நிறுவனங்கள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பெறும் லாபம் எவ்வளவு தெரியுமா... பெட்ரோலியத் துறை கொடுத்துள்ள தகவல்களின் படி ரூ.22 ரூபாய் (சுத்திகரிப்புச் செலவு, மத்திய அரசின் வரிகள், போக்குவரத்துச் செலவு, நிர்வாகச் செலவு, மாநில வரிகள் எல்லாம் கழித்த பிறகு!)

டீஸலில் இதைவிட சற்று லாபம் குறைவாக இருக்கும் அவ்வளவுதான்.
இதில் கொடுமை என்னவென்றால் பெட்ரோலியப் பொருட்களின் விலையை மத்திய அரசு குறைத்தாலும், இதில் சம்பந்தமே இல்லாமல் கணிசமான வரி வருமானம் பெறும் மாநில அரசுகள் வரியைக் குறைக்கும் எண்ணத்திலேயே இல்லை. ஆனால் ஒவ்வொரு முறை பெட்ரோல் விலை ஏறும்போதும் அந்தந்த மாநில அரசுகள் உள்ளூர் வரி விகிதத்தையும் உயர்த்திக் கொண்டே போகின்றன.

நேற்றுதான் ஒருவழியாக பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா, பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை குறைக்கப்படும் என்று அரை மனதோடு அறிவித்துள்ளார். அது கூட அடுத்த வாரம்தானாம்.

சிலர் இப்படி வாதிடக் கூடும்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வாங்கும்போது 3 மாத கால ஒப்பந்த அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது. எனவே 3 மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்.

அது சரிதான்... சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்வதாக செய்தி வெளியான அடுத்த இரண்டு மணிநேரங்களில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்துகிறார்களே... அது எப்படி? அதற்கும் 3 மாத காண்ட்ராக்ட் காலம் முடியும் வரை காத்திருந்து நிலைமைகளை கணித்து உயர்த்தலாமே!

6 மணிக்கு விலை உயர்வு என ஊடகங்களில் அறிவிப்பு வரும். இரவு எட்டு மணிக்கே பெட்ரோலிய நிறுவனங்களிடமிருந்து ஆட்ர்டர்கள் பறக்கும். நள்ளிரவுக்குள் விலை உயர்வு அமலுக்கு வந்துவிடும். இந்த வேகம் விலைக் குறைப்பில் இல்லையே... இவர்கள் மக்கள் நல அரசுகள் என சொல்லிக் கொள்வதில் அர்த்தமிருக்கிறதா?

பல மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடந்து வருவதால், தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளன. எனவே, விலை குறைப்பு அறிவிப்பை வெளியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதைச் சாக்காகக் கொண்டு அரசு மௌனம் சாதிக்கிறது. எண்ணெய் நிறுவனங்கள் முடிந்த வரை லாபம் பார்த்து வருகின்றன.

குறிப்பு: இந்தப் பணம் ஆட்சியாளர்கள் வீட்டுக்கா போகப்போகிறது? என்று கேட்பவர்களுக்கு... அரசுத் துறை பெட்ரோலிய நிறுவனங்கள் அடிக்கும் லாபம் அரசியல்வியாதிகள், மற்றும் அதிகாரிகளின் ஊதாரிச் செலவுகளுக்குதான் அதிகம் பயன்படுகிறது என்பது ஆடிட்டர் அண்டு கண்ட்ரோலர் ஜெனரலின் அறிக்கை வைத்துள்ள குட்டு!

-எஸ்.ஷங்கர்

இதற்குப் பெயர் மனிதாபிமானம்!

துவும் தட்ஸ்தமிழ் செய்திதான். நமது இதயம் தொட்ட ஒரு செய்தி. கூடுதல் அலங்காரங்களின்றி அப்படியே தருகிறோம்...

இந்தியர் இதயம் தொட்ட லண்டன்வாசிகள்!

லண்டன்: மனிதாபிமானம் என்று வந்துவிட்டால் மதங்களும் நாடுகளின் எல்லைகளும் குறுக்கே நிற்பதில்லை (அதாவது மனிதாபிமானமுள்ள நாடுகளுக்கும் அதன் மக்களுக்கும்!) என்பதற்கு இதோ இன்னுமோர் உதாரணம்.

மும்பையில் சில தினங்களுக்கு முன் நடந்த கொடூர தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்த அப்பாவி மக்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு லண்டன்வாசிகள் திரண்டு வந்து இன்று அஞ்சலி செலுத்தினர்.

லண்டனின் வர்த்தக மையமான கேனரி டவர் பகுதியில் நூற்றுக்கணக்கான மெழுகுவர்த்திகளை ஏற்றி தங்கள் இதயப் பூர்வ அஞ்சலியைத் தெரிவித்தனர்.

லண்டன் மாநகரின் மையப்பகுதியான இங்கு எனக்குத் தெரிந்து இந்த இரு ஆண்டுகளில் இத்தனை உணர்ச்சிப்பூர்வமான, நெகிழ வைக்கும் காட்சியை நான் கண்டதில்லை. நூற்றுக்கணக்கான மெழுகு வர்த்திகளைக் கைகளில் ஏந்தியபடி அமைதி (PEACE) என்ற எழுத்து வடிவத்தில் அந்த வெள்ளைக்காரர்கள் நின்ற காட்சி என் இதயத்தைத் தொட்டது. தீவிரவாதத்தால் காயம்பட்ட இந்திய இதயங்களுக்கு ஒரு ஒத்தடமாக எனக்குப் பட்டது இந்தச் செயல்.

-அண்ணாமலை நடராஜன்

ஒரு இந்தியனின் இன்றைய மன நிலை!

சமீபத்தில் வெளியான ஒரு ஆங்கிலக் கட்டுரையின் மேம்பட்ட தமிழ் வடிவம்தான் இந்தக் கட்டுரை என்றாலும், படிக்கும் ஒவ்வொருவரின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் விதத்தில் ஒவ்வொரு வரிகளும் அமைந்திருப்பதை உணரலாம்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் தரமான எழுத்தாக இதைப் பார்த்தேன்.

கட்டுரை வெளியான தளம் தட்ஸ்தமிழ். அதன் ஆசிரியர் ஏ.கே.கான் பாராட்டுக்குரியவர்.

இனி செய்தி!

இவர்களுக்கு தேவையா என்எஸ்ஜி பாதுகாப்பு?

சென்னை: நாட்டில் மக்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாத நிலையில் அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்காக நாடு தினமும் பல நூறு கோடிகளை செலவழித்துக் கொண்டிருக்கிறது. இதில் பெரும்பாலான அரசியல்வாதிகள் வெறும் பந்தாவுக்காகவே தங்களைச் சுற்றி என்எஸ்ஜி கமாண்டோக்களை நிறுத்தி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெட்டி பந்தா அரசியல்வாதிகளில் முக்கியமானவர் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிலதா. இவர் முதல்வராக இருந்தபோது இவரது காருக்கு முன்னும் பின்னும் 100 கார்களாகவது போக வேண்டும். என்எஸ்ஜி கமாண்டோக்கள், ஜாமர்கள் பொருத்திய வாகனங்கள், போலீஸ் ஜீப்புகள், ஆம்புலன்ஸ், கரை வேட்டிகளி்ன் கார்கள் என குறைந்தபட்சம் 50, 60 கார்களாவது போக வேண்டும். இதைப் பார்த்து மக்கள் வாயைப் பிளக்க வேண்டும். இவ்வளவு பெரிய தலைவரா என்று மக்கள் நினைக்க வேண்டும்.

இவரது வாகனம் வருவதற்கு 1 மணி நேரத்துக்கு முன்பே சாலைகள் எல்லாம் சீல் செய்யப்பட்டுவிடும். ஆட்சியை விட்டு போன பின்னர் தான் இவரது கார் வரிசை கொஞ்சம் குறைந்தது. ஆனாலும் இவருக்கு இன்னும் இசட் பிளஸ் என்எஸ்ஜி பாதுகாப்பு உள்ளது.

ஜெயலலிதாவைவிட ஒரு படி மேலே போய்விட்டவர் உத்தரப் பிரதேச முதல்வர் மாயாவதி. இவருக்கு அரசியல் எதிரிகள் தவிர வேறு எந்த ஆபத்தும் இருப்பதாக எந்தத் தகவலும் இல்லை. இந்த அரசியல் எதிரிகளை எதிர்கொள்ள 4 ஜீப் போலீசாரே போதும். ஆனால், பந்தாவுக்கு அது போதாதே.

இதனால் மாயாவதி தனக்கு என்எஸ்ஜி கமாண்டோ பாதுகாப்பை வலுக்கட்டாயமாகக் கேட்டு வாங்கிக் கொண்டுவிட்டார். இவரது 24 மணி நேர பாதுகாப்புக்கு 24 கமாண்டோக்கள் 3 ஷிப்ட்களில் பணியாற்றுகின்றனர். இவர்கள் தவிர 350 ஆயுதம் தாங்கிய போலீசாரும் 24 மணி நேரம் இவரது பாதுகாப்புக்காக டெடிகேட் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களாவது பரவாயில்லை. அமர் சி்ங் என்று ஒரு அரசியல்-கார்பரேட் புரோக்கர் இருக்கிறார். இப்போது, மத்திய அரசு ஆட்சியில் நீடிக்க இவரும் முலாயம் சிங்கின் ஆதரவுமே காரணம். மத்திய அரசுக்கு சமாஜ்வாடி கட்சி எம்பிக்களின் ஆதரவை அறிவித்த மறு நிமிடமே தனக்கும் என்எஸ்ஜி கமாண்டோ பாதுகாப்பு கேட்டு வாங்கிக் கொண்டார். இவருக்கும் 24 பேர் .. 8 மணி நேர ஷிப்டில் பாதுகாப்பு தந்து கொண்டிருக்கின்றனர்.

அமர் சிங் தனக்கு மட்டும் இந்த பாதுகாப்பை வாங்கிக் கொண்டால் போதுமா.. தனது தலைவர் முலாயமுக்கும் இந்தப் பாதுகாப்பை பெற்றுத் தந்துள்ளார்.

இந்தப் பட்டியலில் தேவெ கெளடாக்கள், சுப்பிரமணியம் சுவாமிகள் போன்ற அரசியல் ஜோக்கர்களும் அடக்கம். இவர்கள் எல்லாம் இசட் கேட்டகிரி என்ற பட்டியலின் கொண்டு வரப்பட்டு என்எஸ்ஜி பாதுகாப்பில் உள்ளனர்.

இப்படியாக 250 பேர் விவிஐபிக்கள் என்ற பட்டியலின் கீழ் கொண்டு வரப்பட்டு என்எஸ்ஜி பாதுகாப்பில் உள்ளனர். இதற்காக அரசு செலவிடம் பணம் ரூ. 158 கோடி.

தீவிரவாதிகளுக்கே தெரியாத ஆட்கள்....:

இந்தப் பட்டியலில் உள்ள மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், சரத் யாதவ், முரளி மனோகர் ஜோஷி ஆகிய பெயர்களையாவது நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், சஜ்ஜன் குமார், ஆர்எல் பாட்டியா, பிஎல் ஜோஷி, பிரிஜ்பூஷன் சரன், பிரமோத் திவாரி... இந்தப் பெயர்கள் நமக்கு மட்டுமல்ல தீவிரவாதிகளுக்கே தெரியாத ஆட்கள்.

அதே போல மத்திய அமைச்சர் என்ற ஒரே காரணத்துக்காக கமாண்டோ பாதுக்காப்பில் உள்ளவர் இ.அகமது. இவரை கேரளாவைத் தாண்டினால் யாருக்கும் தெரியாது.

இன்னொரு கொடுமை.. என்எஸ்ஜி பாதுகாப்பில் உள்ள சஜ்ஜன் குமார் மீது ஒரு கொலை கேசும் உள்ளது.

இதைத் தவிர பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட 14 பேர் இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு என்எஸ்ஜி உச்சபட்ச பாதுகாப்பு அளி்த்து வருகிறது. இதற்கு செலவாகும் தொகை ரூ. 180 கோடி.

நம் நாட்டில் 1 லட்சம் பேருக்கு 122 போலீசார் என்ற கணக்கில் தான் காவலர்கள் உள்ளனர். நாட்டில் மொத்தமுள்ள போலீசாரில் உளவுப் பிரிவில் உள்ளவர்கள் 1 சதவீதத்துக்கும் குறைவு. ஆனால், அரசியல்வாதிகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடும் போலீசாரின் எண்ணிக்கை 33 சதவீதம்.

அதாவது 3ல் 1 போலீஸ்காரருக்கு வேலையே அரசியல்வாதிகளின் பாதுகாப்பு தான்.

மத்திய உளவுப் பிரிவி்ன் தகவலின்படி இப்போது என்எஸ்ஜி பாதுகாப்பில் உள்ள 30 சதவீதம் பேருக்கு அந்த பாதுகாப்பே தேவையில்லை. 50 சதவீதம் பேருக்கு லத்தி ஏந்திய சில போலீசாரே போதும். மிச்சமிருக்கும் 20 சதவீதம் பேருக்குத் தான் உண்மையிலேயே இந்த பாதுகாப்பு தேவை.

இன்னொரு விஷயமும் உண்டு. 1984ம் ஆண்டில் இந்த என்எஸ்ஜி உருவாக்கப்பட்டதன் நோக்கம் அரசியல் தலைவர்களை பாதுகாப்பது அல்ல. விமானக் கடத்தலைத் தடுப்பது, தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை நடத்துவது. இது தான் இந்தப் படை உருவாக்கப்பட்டதன் உண்மைக் காரணம்.

இந்தப் படையில் Special Action Group (SAG), Special Rangers Group (SRG) என இரு பிரிவுகள் உள்ளன. ராணுவத்தின் மிகச் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்து உருவாக்கப்படுவது SAG. எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீ்ஸ் படை, இந்தோ-திபெத்தியன் பார்டர் போலீஸ், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, மாநில போலீசில் இருந்து சிறந்த வீரர்களைக் கொண்டு உருவாக்கப்படுவது SRG.

மிகக் கடினமான பயிற்சிகள், வெறும் கையால் ஆட்களைக் காலி செய்யும் திறமை, காடு, பனி, பாலைவனம், கடல், மலை எந்த இடத்திலும் பல நாட்கள் சோறு தண்ணி இல்லாவிட்டாலும் தாக்குப் பிடித்து தாக்குதல் நடத்தும் திறமை மிக்கவர்கள் இந்த வீரர்கள்.

விவிஐபிக்கள் என்ற பெயரில் வலம் வரும் அரசியல்வாதிகளை இசட் பிளஸ், இசட், ஒய், எக்ஸ் என பிரித்து பாதுகாத்துக் கொண்டிருக்கின்றனர் இந்தப் படையினர்.

54 எம்பிக்களை கையில் வைத்துள்ள பிரகாஷ் காரத், ஏபி பர்தான் ஆகியோரும் அரசியல் தலைவர்கள் தான். மம்தா பானர்ஜியும் அரசியல் தலைவர் தான். 14 வருடம் முதல்வராக இருந்த ஜோதி பாசுவும் அரசியல் தலைவர் தான். ஆனால், இவர்கள் எல்லாம் ஒரு போலீஸைக் கூட உடன் வைத்துக் கொள்வதி்ல்லை. இவர்கள் மக்களுடன் கலந்துவிட்ட உண்மையான அரசியல் தலைவர்கள். இவர்களைப் போல மேலும் பல நல்ல அரசியல்வாதிகளும் உள்ளனர்.

ஆனால், தங்களைச் சுற்றி கமாண்டோ நின்றால் தான் படிப்பறிவில்லாத மக்கள் மனதி்ல் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்த முடியும், தான் ஒரு பெரிய தலைவராகத் தெரிவோம் என்ற ஒரே காரணத்துக்காக இந்தப் படையை தேவையே இல்லாமல் பயன்படுத்தி வருகின்றனர் ஊழல், லஞ்சம், சுரண்டலுக்குப் பேர் போன பல அரசியல்வாதிகள்.